September 8, 2020
வாசலில் கோலம் இட அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
அறிவியல் ரீதியாக பார்த்தால் தினமும் அதிகாலை நான்கு முதல் ஆறுமணி வரை தூய்மையான ஓசோன் காற்று கிடைக்கும். அதை சுவாசித்தால் உடலுக்கு புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும். குறிப்பாக மார்கழி மாதத்தில் பூமத்ய ரேகையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றது. மார்கழிமாத அதிகாலை நேரம் பஞ்சபூதங்களிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள் நம் உடலுக்கு மிகுந்த நன்மை செய்வதாக உள்ளன. வீட்டு வாசலில் புழுதி பறக்கும் மண்ணை சாணம் தெளித்து சீர்படுத்துவர். சாணம் கிருமிநாசினி. சூரிய உதயத்திற்கு முன் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சூரியன் உதிக்கையில் வெளிவரும் புறஊதாக் கதிர்களை தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சாணம் தெளிக்கப்பட்ட சமதளப் பகுதியில் கோலமிடுவதால் கோலம் நேர்த்தியாக இருக்கும். அரிசிமாவின் மூலம் குனிந்து கோலமிடுவது ஒரு யோகாசனம் ஆகும். இதன்மூலம் இடுப்பு மற்றும் முதுகு, மூட்டு எலும்புகள் வலுப்பெறும். கோலத்தில் இடப்படும் புள்ளிகள் மற்றும் வடிவங்களால் சிந்தனைத் திறன், ஓவியன்திறன், கற்பனைத் திறன் நினைவுத்திறன் என்று மூளையின் ஆற்றல் பெருகுகிறது.
அடுத்து ஆன்மீக ரீதியாக... அதிகாலையில் எழுந்து அனைத்து தேவாதி தேவர்களும் குடியிருக்கும் பசுவின் சாணத்தை வாசலில் தெளித்து அரிசிமாவினால் கோலம் இடுவதால் வீட்டிற்கு வஷ்மி கடாக்ஷம் கிடைக்கும். அரிசிமாவை சிறு ஜீவராசிகள் உணவாக எடுத்துச் செல்வதால் தானம் செய்த புண்ணியம் சேரும். குறிப்பாக மார்கழி மாதத்தின் அதிகாலை நேரப் பாவை நோன்பு போன்ற விரதங்கள் வேண்டுதல்கள் விரைவான பலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. கோலம்போடுதல் இந்துமதத்தில் வலியுறுத்தப்படும் செயல்முறை ஆகும். கோலத்திற்கு யந்திரம் எனும் பெயரும் உண்டு. சில யந்திரங்கள் நன்மை செய்யும். சில தீமை செய்யும். இந்துமத மாந்த்ரீகத்தில் யந்திரங்களின் பங்கு அதிகம். மேலும் இந்து மதத்தில் பலவித இனங்கள் இருப்பதால் தம் இனத்தின் வாழ்விடம் மற்றும் வரலாற்றுக்கேற்ப கோலங்களின் வடிவங்கள் இருக்கும். இந்து மதத்தில் மட்டுமே இருந்த கோலமிடுதல் இப்பொழுது அனைத்து மதத்தினரும் பின்பற்ற தொடங்கியதால் அவரவர் மதம் சார்ந்த வடிவங்களில் கோலமிட தொடங்கிவிட்டனர்.
அப்படிப்பட்ட கோலம்போட என்னென்ன தேவை தெரியுமா? சமதளப்பரப்பு, கொஞ்சம் அரிசிமாவு, (இப்பொழுது அரிசிமாவிலா கோலம் போடுகிறோம்? வண்ணப்பொடிகள் தானே) கொஞ்சம் திறமை இருந்தால் போதும். அழகான கோலமிட முடியும்.
ஆனால் கோலத்தில் என்னென்ன வகைகளுண்டு? அவற்றின் குணாதிசயம் என்னென்ன என்று தெரிந்துக் கொள்வதும் அவசியம். கோலத்தில் மூன்று வகையுண்டு. புள்ளிக்கோலம் - புள்ளிகளை வரிசையாகவும் ஊடாகவும் கணக்கிட்டு வைத்து அதனை இணைத்து வடிவத்தை கொண்டுவருதல். நெளிக்கோலம் - அதேபோல் புள்ளிகளை வரிசையாகவும் ஊடாகவும் கணக்கிட்டு வைத்து அப்புள்ளிகளுக்கு இடையில் நெளிந்து செல்லும் கோடுகளில் வடிவத்தை கொண்டுவருதல். ரங்கோலி - புள்ளிகள் இல்லாமல் கற்பனை மூலம் தேவையான வடிவத்தை வரைதல். இதற்கு முடிவென்பது இல்லை. ஒரே ரங்கோலி கோலத்தை ஒரு மைதானம் நிறையுமளவு வரைய முடியும்.
ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கோலம் உண்டு. உதாரணமாக ஞாயிறன்று சூரியக்கோலம். திங்களன்று சந்திரக்கோலம்...
விழாக்கள், வீட்டு நிகழ்வுகள் என்று தனித்தனி கோலங்களை வைத்துள்ளனர். தீபாவளி அன்று தீபக்கோலம், பொங்கல் அன்று பொங்கல்பானை கோலம், திருமண வீடுகளில் மலர்க்கோலம், கோயில் திருவிழாக்களில் மலர், தீபம், அன்னம், மயில், சங்கு என்று பலவித கோலங்களை இடுவர். பூஜையறையில் அறுங்கோண எண்கோண வடிவ கோலங்களை இடுவர். பூஜையறைக் கோலத்தை வாசலில் இடமாட்டார்கள். துக்க வீடுகளில் கோலமிட மாட்டார்கள். வாசலில் இருக்கும் கோலத்தை வைத்தே வீட்டு சூழ்நிலையும் அவர்கள் இனத்தையும் கூட கண்டுபிடித்து விடலாம் என்பர். திருமண வயதுள்ள ஆண், பெண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் கோலத்தின் நடுவே பூசணிப்பூ அல்லது செம்பருத்தி பூ வைத்திருப்பர். அக்காலத்தில் கோலமையத்தில் இருக்கும் பூவை வைத்து திருமணவயது பிள்ளைகள் இருப்பதை அறிந்து வரன் பேசி முடிப்பர். மேலும் கோலத்தை சங்கேத பாஷையாகவும் தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர்.