February 12, 2021
முனிவர் என்பவர் சராசரி மனிதனிடம் இருக்கும் தீய எண்ணங்களை விட்டு நல்ல எண்ணங்களோடு வாழ்பவர். மிகவும் இனிமையா பேசுபவராகவும் தர்மநெறியில் வாழ்பவராகவும் இருப்பர். முனிவரைச் சுற்றி தூய எண்ணங்களின் அதிர்வலைகள் இருக்கும். நாம் அவரைச் சந்தித்தால் வணங்கத் தோன்றும்.
நம் துன்பங்களைக் கேட்டு மனதுக்கு இனிமையும் தைரியமும் நம்பிக்கையும் தரும் சொற்களை பேசுவர். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களும், மாயமந்திரங்களை அறியாத ஆன்மீகவாதிகளுமே முனிவர்கள் எனப்படுவர்.
முனிவர்கள் அமைதியும் அழகும் நிறைந்த காட்டுப்பகுதியில் குடில் மற்றும் நந்தவனம் அமைத்து வசிப்பார்கள். மேலும் காட்டில் கிடைக்கும் பழங்கள் கிழங்குகள் தானியங்கள் முதலியவற்றை உணவாக கொள்வர் அவர்கள் சைவம் மட்டுமே உண்பர். ஒருசிலர் அசைவம் உண்ணுவதாக சொல்லப்படுகிறது. அதைப்பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லை. முனிவர்கள் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவார்கள். அதே அளவு கோபமும் கொள்வார்கள்.
முனிவர்களின் தோற்றம் எப்படி இருக்குமென்றால் தலையில் ஜடாமுடியுடன் உச்சந்தலையில் படிக்கட்டு போல் சுற்றி இருப்பர். காவி உடையும் ருத்ராட்சமும் அணிந்து இருப்பர். கையில் கமண்டலமும் தாங்கு கோல் ஒன்றும் வைத்திருப்பர். முனிவர்கள் அமைதி நிறைந்த பகுதியில் உள்ள மரத்தடியில் அல்லது குடிலில் பூஜைசெய்து தியானத்தில் ஈடுபடுவர். பக்தி மார்க்கத்தில் செல்லும் இவர்கள் திருமணமும் செய்து கொள்வர். இல்லற வாழ்வில் இருந்து கொண்டே பக்தி மார்க்கத்தையும் கடைப்பிடிப்பர்.
இல்லறவாழ்வு திகட்டி இதுவரை செய்த தியானத்தில் மெய் ஞானத்தை அடையமுடியாது என்று உணரும்போது, அதற்கான வழியை தேடி பயணிக்கும்போது முற்றும் துறந்து சித்தர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகளை தேர்ந்தெடுப்பர்.